முதல் கடிதம்…
December 19, 2008 at 9:11 பிற்பகல் மறுமொழியவும்
அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, இணையதளத்தில் என்னுடைய முதல் பிம்பம். நான் வரையும் முதல் மடல். இனி வரும் காலத்தில் நான் எழுதப்போகும் தொகுப்புகளின் முன்னுறை.
இணையதளத்தில் தனது பாதங்களை பதிக்க வரும் ஒவ்வொரு மனித(தமிழ)னைப் போல, ஓர் ஆர்வக்கோளாரு காரணமாக தமிழில் எழுதத் துடிக்கும் ஒரு சாதாரணமான (ஆ)சாமி நான். ஒரு காலத்தில் “கவி”க்கு “தாச”னாக சுற்றி திரிந்த நான், இன்று கணினிக்கு தாசனாக மாறி விட்டேன். காரணம், நான் கற்கும் கல்வி! வான்வெளிச் சாதனத் துறையில் ஆராய்ச்சி வழி முதுகலைப் பட்டம் பெற கடந்த இரண்டு ஆண்டுகளாக “கணித்தகன ஆய்வுகூட”த்தில் ஆராய்ச்சி புரியும் ஆய்வாளன் நான். கணினித்துவ முறைப்படி ஆராய்ச்சி செய்வதன் காரணமாக கணினியுடனே காலம் தள்ள தொடங்கியதால் இந்த மாற்றம்.
‘உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை..,காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி’ என்று ஒரு சில நேரங்களில் பாட விழைந்தாலும் “கடவுள் செய்த குற்றமல்ல, இது நான் விழைந்து சூடிக் கொண்ட சுற்றம்” என்று மனதில் ஓர் ஓசை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டு இருக்கும். “குற்றம்” என்று நான் உரைத்தது மாற்றத்தை அல்ல, ஆய்வை! ஆய்வாளன் நானே ஆராய்ச்சியை இவ்வாறு உரைப்பது முறையாகா. ஒவ்வொரு ஆய்வாளனும் அவன(ள)து ஆய்வு காலம் முடியும் முன்னர், குறைந்தபட்சம் ஒருசில முறைகளாவது இவ்வாறு நினைப்பது திண்ணம். பல மாதங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவு நாம் எதிர் பார்த்தது போல் இல்லாமல் போகும் போது இவ்வாறு தோன்றும். மேலோட்டமாக பார்த்தால் இது முறையே. சற்றே உள்ளூர்ந்து சென்று உணர்ந்தால் உண்மை புலப்படும்.
ஆய்வு என்பதன் பொருளே “தேடல்” ஆகும். இல்லாத ஒன்றையோ, இன்னும் கண்டுபிடிக்கப் படாத ஒன்றையோ தேடும் தேடல் ஆகும். இருட்டில் குருடன் கண்ணைக் கட்டிக்கொண்டு யானையை தேடுவது போன்றது. நமது கையில் நமக்கு உதவியாக நாம் கற்ற கல்வி என்னும் தடி மட்டுமே இருக்கும். ஆய்வின் பலமும் பலவீனமும் இதுதான். உண்மையில் இது வெறும் பலம் மட்டுமே. தன்னிடம் உள்ள தடியை உபயோகிக்க தெரியாதவன் இந்த பலத்தை பலவீனம் என்று எண்ணுகிறான். பலவீனம் என்கிறான். அது வெறும் மாயை மட்டுமே. இந்த மாயையை உடைத்து எறிய கல்வி தடி சற்று தருணம் கொள்ளும். இச்செயலை விரைந்து செய்து முடிக்க தற்காலிகமாக வேறு தடி ஒன்றை மனம் வேண்டும். அவ்வாறு தேடி பல “தடி”களை எடுத்து, ‘சீ, சீ, இந்த பழம் புளிக்கும்!’ என்று அவைகளை விடுத்து, இறுதியாக நான் எடுத்த தடிதான் இந்த வலைப்பதிவு.
இணையதளம் எனக்கு புதிது அல்ல. இணையதள-வலைப்பதிவும் அவ்வாறே. ஏறத்தாள ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சில முறைகள் நான் வலைப்பதிவு செய்தது இன்னும் என் நினைவில் உள்ளது. சிலப்பல காரணங்களால் அவற்றை தொடர இயலாமல் போய் விட்டது. பலச்சில காரணங்களால் இப்பொழுது இது என் பக்கம் வந்துள்ளது. என்வே இனி வரும் காலத்தில் என் மனதைப்போல், எனது அறிவைப்போல், எனது வயதைப்போல், வலைப்பதிவுகளும் விரிந்துகொண்டே செல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்.
நன்றி.
பி.கு. 1: நான் என்னை (ஆ)சாமி என்று உரைத்ததை ‘அன்பே சிவம்’ என்று நம்புவோர் அறிவர்.
பி.கு. 2: இது முன்னுரை மற்றும் முதலுறை ஆதலால் செந்தமிழில் எழுதியுள்ளேன். இனி வரும் தமிழுறைகளை வழக்குத்தமிழில் எழுத முனைகிறேன்.
பி.கு. 3: இன்று திசம்பர் மாதம் ஏழாம் நாள், எனது ஒரு தோழன் மற்றும் ஒரு தோழி ஆகியோரின் பிறந்த தினத்துடன் எனது இந்த புதிய வலைப்பதிவும் இனி பிறந்த தினம் கொண்டாடும்.
பி.கு. 4: இப்பதிவு திசம்பர் மாதம் ஏழாம் நாள் எழுதப்பட்டதாக இருந்தாலும், பத்தொன்பதாம் தேதி பதிப்பிக்கப்பட்டது. (ஏழாம் தேதி நான் பதிப்பிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை.
அதற்காக வருந்துகிறேன்.)
Entry filed under: பைந்தமிழ் மடல்கள்.... Tags: .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed